கோவை:பொள்ளாச்சி நகரின் பல்லடம் சாலையில் உள்ள ரோட்டரி கிளப்பில் (Rotary Club in Pollachi) பொள்ளாச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் விவிடிஎன் (VVDN Company Pvt Ltd) தனியார் கம்பெனி பங்குதாரர்களுக்குப் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா இன்று (ஜன.28) நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் பிரியங்கா மற்றும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகசுந்தரம் எம்பி, 'பொள்ளாச்சி அருகே 100 ஏக்கர் பரப்பளவில் விவிடிஎன் தனியார் தொழிற்சாலை கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாகவும், உதிரிப் பாகங்கள் தயாரிப்பில் உள்ளனர். இங்குத் தயாரிக்கப்படும் உதிரிப் பாகங்கள் கொரியா, கனடா என நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
25,000-பேருக்கு வேலைவாய்ப்பு:மேலும், தமிழ்நாடு அரசு கிராமப்புற பெண்கள் மற்றும் பொள்ளாச்சி வளர்ச்சி பெற, தனியார் தொழிற்சாலை ஆரம்பிக்க அனுமதி அளித்துள்ளது. இது மாதிரி தொழிற்சாலைகள் முதலீடுகள் செய்யவும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் மூலம் எதிர்காலத்தில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.