கோவை: அதிமுகவைச் சேர்ந்த சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இன்று (அக்டோபர் 18) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
ரம்யாவின் தந்தை வீட்டில் சோதனை
அந்த வகையில் கோவை ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி. கார்டன் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தைக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிலும் இன்று காலை 6 மணிமுதல் பெண் அலுவலர் உள்பட ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
விஜயபாஸ்கரின் மாமனார் வீடு பாதுகாப்புக்காக வீட்டுக்கு வெளியே காவல் துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும்போது இந்த வீட்டில் தங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையானது நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை