கோயம்புத்தூர்: நீலகிரி உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த 8, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், நேற்று (டிச.8) இரவு முதல் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால், அப்பகுதியில் உள்ள அன்னூர் குளம், ஒட்டார்பாளையம் குளம், ஊத்துப்பாளையம் குளம், கஞ்சப்பள்ளி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியது. இவ்வாறு குளங்கள் நிரம்பியதை அடுத்து, அவற்றில் இருந்து வெளியேறும் நீர் அன்னூர் - சத்தியமங்கலம் இடையேயான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
அதன் காரணமாக, இந்த சாலையைக் கடக்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், குளத்தில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.