கோயம்புத்தூர்:அன்னூர் தாலுக்காவில் அன்னூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் என இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவ்விரு ஒன்றியங்களிலும் மொத்தமாக 30 ஊராட்சிகள், இரு பேரூராட்சிகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கு அன்னூர் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் இரவு நேரங்களில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படும் நோயாளிகளை முறையாக கவனிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சாணிப்பவுடர் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒருவரை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.
சிகிச்சைக்காக வந்த நோயாளி உயிருக்கு போராடிய நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கதவை தட்டிய பின்னரே இரவு நேரத்தில் பணியில் இருந்த செவிலியர் கோமதி கதவை திறந்துள்ளார். பின்னர், கதவை திறந்த செவிலியர் கோமதி சானிபவுடர் குடித்த அப்பெண்மணிக்கு சிகிச்சையளித்துள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:முப்போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு