சில நாட்களுக்கு முன்பு இலங்கையிலுள்ள இணைய தளம் ஒன்றில் இலங்கையில நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா இந்தியாவில் மரணமடைந்துவிட்டதாகவும், கோவையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இலங்கை தூதரகம் மூலம் கிடைத்தத் தகவலைப் பெற்று, கோவை காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கோடா லொக்காவுடன் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்த கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமானி தாஞ்சி, சிவகாமசுந்தரி ஆகியோர் அங்கோடாவை ஜூலை 3 ஆம் தேதி மருத்துவமனையில் பிரதீப் சிங் என்ற பெயரில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாராடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி உடற்கூறாய்வு செய்து இறப்புச் சான்றிதழுடன் அங்கோடாவின் உடலை அமானி தாஞ்சியிடம் ஒப்படைத்தனர். இந்தப் பெண்கள் இருவரும் தியானேஸ்வரன் என்பவரின் உதவியோடு மதுரைக்கு அங்கோடாவின் உடலைக்கொண்டு வந்து தகனம் செய்துள்ளனர்.