கோயம்புத்தூர்: போத்தனூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சமூக நீதி கிடைக்கும். தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரங்கள் தமிழக அரசிற்கு இருக்கிறது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி கருத்தரங்கம் நடத்த உள்ளோம். பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களை முன்னுக்கு கொண்டு வருவதுதான் சமூக நீதி. சாதி அடிப்படையில்தான் நம்மை பிரித்து வைத்தார்கள். சாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு கிடைக்கிறது.
மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இந்தியாவில் 8 விழுக்காடு மட்டுமே உள்ள முன்னேறிய சமுதாயத்திற்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை எழுப்பும் காலம் வந்துவிட்டது.
இது பாமகவின் பிரச்னையோ, வன்னியர்கள் பிரச்னையோ இல்லை. தமிழக மக்களின் பிரச்னை. பின்தங்கிய மக்கள் முன்னேற வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு முன்னேறும். திமுக உண்மையில் பெரியார் வழியில் வந்தவர்கள் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். சமூக நீதியின் பிறப்பிடம், தமிழ்நாடு. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து, இட ஒதுக்கீட்டை பீகார் அதிகரித்துள்ளது.
பீகார் அரசிற்கு உள்ள தைரியம் உங்களுக்கு இல்லையா? முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் வசனம் மட்டும்தான் பேசுவீர்களா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை எனில், திமுகவை சமூக அநீதி கட்சி என மக்கள் பேசத் துவங்குவார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு தருகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிகளைக் கணக்கெடுப்பது அல்ல. ஒவ்வொரு சாதியும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுப்பதுதான். மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்.
ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 13 ஆண்டுகளுக்கு முன்பே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
ஆனால், 13 ஆண்டுகளாக கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு தூங்கி கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக, அரசியலுக்காக நாங்கள் கூடவில்லை. சமூக நீதிக்காக கூடியுள்ளோம். சாதியை வைத்து திராவிட கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை முன்னேற்றிய சாதிகளுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. திமுக அரசு கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்கிறது.