கோயம்புத்தூர்:கோவை வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் (85). 1 ரூபாய்க்கு இட்லி விற்று, ஏழை எளிய மக்களின் பசியாற்றிவருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஓர் ஆளாக கடந்த 30 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறார். அதிகாலையிலேயே எழுந்து சுடச்சுடச் சுவையான இட்லி, சாம்பார், சட்னி தயாரிக்கிறார். இதற்கு விறகு அடுப்பினையும், ஆட்டுக்கல்லையும் தான் பயன்படுத்திவந்தார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து பாரத்கேஸ் மாதந்தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச்பி கேஸ் ஒரு சிலிண்டரையும் வழங்கி வருகிறது.
மேலும், கமலாத்தாளுக்கு வீடு கட்டிக்கொடுக்க ஆனந்த் மகேந்திரா ஏற்பாடு செய்தார். அந்தவகையில், மகேந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மகேந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து, ஆவணத்தை அவரிடம் வழங்கியது. இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி வேலுமணி, 2.5 லட்சம் ரூபாய் செலவில் 1.75 சென்ட் இடத்தை இட்லி பாட்டியின் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.