கோயம்புத்தூர்:வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் அருகில் புலிக்குட்டி ஒன்று, உடல் நலக்குறைவு காரணமாக 2021ஆம் ஆண்டு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் மானாம்பள்ளி மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 2,000 சதுர அடியில் தனி வளாகம் அமைக்கப்பட்டு, புலிக்குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த புலிக்குட்டிக்கு தற்போது மூன்று வயதாகிறது.
இதற்கு உணவாக முயல், கோழி மற்றும் வன விலங்குகளால் தாக்கப்பட்ட இறந்த ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை உணவாக அளிக்கப்பட்டு, வனத்துறை பாதுகாத்து வந்தது. இந்நிலையில் இந்த புலியை காட்டில் விடுவதா அல்லது வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் ஒப்படைப்பதா என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராமசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாத், முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் பாலாஜி, கால்நடை மருத்துவர் விஜயராகவன், உதவி இயக்குனர் செல்வம் மற்றும் கள இயக்குனர் பீட்டர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.