கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் எட்டுமணி நேரத்தில் குற்றவாளிகளான மருமகள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர், பொள்ளாச்சி போலீசார். பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச் சேர்ந்த தெய்வானையம்மாள்(75) தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்து இருப்பதாக, பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.
விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் சஞ்சய், கௌதம், ஈஸ்வரி, பானுமதி மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது, “தெய்வானையம்மாள் வீட்டில் மருமகள் ஈஸ்வரி தனது மகன் சஞ்சய் உடன் குடியிருந்து வந்தார். பின்னர் அதே தெருவில் ஈஸ்வரி மற்றொரு தனி வீட்டுக்குச் சென்றார். அவ்வப்போது தெய்வானையம்மாள் உதவி செய்ய சஞ்சய்யை அழைப்பது வழக்கம். இந்நிலையில், சஞ்சய்க்கு, பைக்குக்கு பணம் கட்ட, 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. மூதாட்டியிடம் நகையைப் பறிக்க திட்டமிட்ட சஞ்சய்(18) மற்றும் அவரது நண்பர்களான கவுதம்(19), 16வயது சிறுவன் ஆகியோருடன் தெய்வானையம்மாள் வீட்டுக்குச் சென்றனர்.
பின்னர் மூதாட்டியைக் கொலை செய்து, எட்டரை சவரன் நகையை திருடிச் சென்றனர். பாட்டி இறந்த தகவல் தெரிந்து கொண்டு அங்கு சென்ற ஈஸ்வரி பீரோவில் இருந்த 20ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இது எல்லா விஷயங்களும் மூதாட்டியின் மருமகளான பானுமதிக்கு தெரிந்தும் மறைத்தது விசாரணையில் தெரிய வந்தது.