கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு, தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநிலத் தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோயம்புத்தூர் மாவட்டமானது சமூக மக்களும், அனைத்து மாநிலங்களையும் சார்ந்த தொழிலாளர்களை கொண்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கிவரும் தொழில் சார்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எவ்வித பகைமையுமின்றி அமைதியான முறையில் பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் நன்மாவட்டமாகும்.
இங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான இருப்பிட வசதி, உணவு, ஊதியம் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி அனைத்தும் வேலையளிப்பவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சாதி, மொழி மற்றும் இனப்பிரச்னைகள் ஏதும் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம் மற்றும் பொது அமைதியினைப் பராமரித்து வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதன் காரணமாக கோயம்புத்தூரிலிருந்து வெளியேறி வருவதாகவும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும்.
பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள் மற்றும் புகார்களைத் தீர்ப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட "புலம்பெயர் தொழிலாளர்கள் குறைகள் குழு" (Migrant Labour Committer) அமைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் துறையின் மூலமும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.