தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செல்லவிருந்த விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், நீண்ட நேரம் பேட்டி அளித்துக் கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கோவை விமான நிலையத்துக்கு வந்த அண்ணாமலை அங்கு இருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக நீண்டு சென்று கொண்டிருந்த அதே நேரத்தில், அண்ணாமலை செல்ல இருந்த இண்டிகோ விமானமும் புறப்படத் தயாராகியது. இதனால் விமான ஊழியர்கள், அங்கு இருந்த பாஜகவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியிடம் விமானத்திற்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் "பைலட் இறக்கிவிட்டு போய்டுவாரு.." என அண்ணாமலை கூறினார். சிறிது நேரத்தில் மீண்டும் விமான ஊழியர்கள் அண்ணாமலை பாதுகாவலர்களை அணுக முயன்ற நிலையில், செய்தியாளர்களிடம் "தலைவா நான் லாஸ்ட் போர்டிங்" எனக் கூறினார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா - திருவனந்தபுரத்திற்கு இண்டிகோ 6E-7339 என்ற விமானம் புறப்பட்டது. அப்போது ஓடுபாதையில் இருந்து விண்ணில் பறக்க விமானம் புறப்பட்ட நிலையில், அந்த விமானத்தில் இருந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசரகால கதவைத் திறந்ததாக கூறப்பட்டது. இவ்வாறு பயணி ஒருவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த நிகழ்வு சகப் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. அதிலும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இதில் பல நாட்களாக வார்த்தைப் போர் நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ உத்தரவிட்டது.
இதில், அண்ணாமலை, தானும் தேஜாஸ்ரீ சூர்யாவும் எமர்ஜென்சி கதவை திறக்கவில்லை என மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் சற்று மந்தமான நிலையில், விமானத்தில் மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து அண்ணாமலை பயணம் செய்தார். கடந்த பிப்ரவரியில் பெங்களூருவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்து அண்ணாமலை பயணம் செய்தபோது, பயணி ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது, அண்ணாமலை கையெடுத்து கும்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் செல்லவிருந்த விமானங்கள் தாமதம் - காரணம் என்ன?