அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் மூன்றாம் தேதி கிளம்பிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் 13 விமானப் படை வீரர்களுடன் அருணாச்சலப் பிரதேச அடர்ந்த வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவையைச் சேர்ந்த வினோத் என்பவரின் உடலும் விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்துக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சூலூர் விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு தேசிய மாணவர் படையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.