கோவையின் சூலூரில் இந்திய விமானப்படை விமான தளம் பேஸ் ரிப்பேர் டிப்போ இயங்கி வருகிறது.
இங்கு நாட்டின் பல்வேறு இடங்களில் தயாராகும் போர் விமானங்களுக்குப் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தளத்தில் இதுவரை 100 டார்னியர் ரக விமானங்கள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர் படையணியின் 109ஆவது பிரிவு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் அடங்கிய படைப்பிரிவும் இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
சூலூர் விமானப்படை தளத்தின் தலைமை அலுவலராக வாயு சேனா பதக்கம் பெற்ற ஏர் கமாண்டர் பி கே ஸ்ரீகுமார் செயல்பட்டு வந்தார்.
புதிய தலைமை அலுவலராக கே.ஏ.ஏ. சஞ்சீப்
இந்நிலையில் அத்தளத்தின் புதிய தலைமை அலுவலராக வாயு சேனா விருதாளரும், ஏர் கமாண்டருமான கே.ஏ.ஏ. சஞ்சீப் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று (டிசம்பர் 30) விமானப்படைத் தள தலைமை அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் விமானப்படை அலுவலர்களின் அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.
சூலூர் விமானப்படை தளமானது நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இரண்டாம் உலகப்போரின்போது போர் விமானங்கள் புறப்படும் ஓடு தளத்தையும் கொண்டிருந்தது.
டிசம்பர் 8ஆம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை ஏற்றிக்கொண்டு நீலகிரியின் வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு சென்ற ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மோதிக்கொள்ளும் மாணவர்களை உடனே கைதுசெய்ய உத்தரவு: களமிறங்கிய காவல் துறை!