கோவை சூலூர் பகுதி கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள தேஜஸ்வி கல்லூரியில் செயல்பட்டுவரும் கரோனா மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் அங்கு உள்ள வசதிகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
'சேவை செய்கிறேன் என்று மக்களுக்கு நெருக்கடி தரக்கூடாது' அதில் கலந்துகொண்ட அமைச்சர் அலுவலர்களுடன் இணைந்து கோவையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் உச்சத்திலிருந்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது குறைந்துள்ளது. கூடிய விரைவில் கரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் அல்ல; ஆனால் அதை அவர்களாகவே கையில் எடுத்துக்கொண்டு செய்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.
'சேவை செய்கிறேன் என்று மக்களுக்கு நெருக்கடி தரக்கூடாது' அவர்கள் மக்களுக்கு ஏதேனும் சேவைகள் செய்ய வேண்டுமானால் மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி செய்யலாம். அவர்கள் செய்கின்ற பணிகள் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அரசியல் ஆதாயம் தேடும் பணியாக இருக்கக் கூடாது.
நோயின் பிடியில் இருப்பவர்களுக்கு உதவுகிறேன் என்ற போர்வையில் மக்களுக்கு நெருக்கடியை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்படுத்தக் கூடாது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது யுத்த காலத்தில் இருக்கும் நிலை என்பதால் தொற்று தடுப்புப் பணிகளில் மட்டும் கவனம் அதிகமாக செலுத்தப்படுகின்றது. கூடிய விரைவில் தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
கோவை மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்துவிடலாம்" என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.