கோயம்புத்தூர்மாவட்டம், வால்பாறையில் உள்ள பெரிய கல்லார், சின்னகல்லார், பத்தாம்பத்தி, டேன் டீ பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பணிபுரிபவர்களுக்கு அரசு ஆணைப்படி ரூ. 425.40 சம்பளம் வழங்க வேண்டும் என இருந்தும் இன்று வரை தொழிலாளர்களுக்கு உரிய தினக்கூலி வழங்கப்படவில்லை. மேலும் தொழிலாளரிடம் தொழில் வரி ரூ. 1200-லிருந்து ரூ.1600 மாதம் பிடிக்கப்படுகிறது.
சில குறிப்பிட்ட சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து ரூ.600 முதல் ரூ.700 வரை மாதச்சந்தா வசூலிக்கின்றன. இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், டேன் டீ பகுதிகளை தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கண்டித்தும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இன்று (நவ-13) உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்த தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.