கோயம்புத்தூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் அவிநாசி சாலை அருகே அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன, சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராம், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.