கோயம்புத்தூர்:கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் கோவை பந்தய சாலைப் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் கரோனா இன்னும் கட்டுக்குள் வராமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று அதிகம் பரவும் மாவட்டமாக கோவை உள்ளது. மாவட்டத்தில் வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நியமித்துள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைத்து பகுதிகளிலும் உறுதுணையாக இருந்து களப்பணியாற்றுவர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கொங்கு மண்டலத்துக்கு முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளைக் வழங்காமல் இருந்து வருகிறது.
மாநில அரசு கோவை மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அதிகப்படியான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் குறைவாக காணப்படுகிறது.