கோயம்புத்தூர்: விளாங்குறிச்சி பகுதியில் கவுண்டம்பாளையம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது பல முறை உள்ளாட்சித்தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டபோதும் வழக்கு இருக்கின்றது என காரணம் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தனர். உள்ளாட்சித்தேர்தலை நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது.
இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே விபத்தில் பதவிக்கு வந்து விட்டனர். இப்போது தனித்தனியாக ஆட்களை சேர்த்துக்கொண்டு இருவரும் சண்டை போடுவது சரியல்ல.
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு, இவர்கள் எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சித்தேர்தலில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை. கோவையில் வேலுமணி வார்டில் 2000 ஓட்டுகள் அதிகம் வாங்கி, திமுக ஜெயித்து உள்ளது. ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக தற்போது சாதிக்கட்சியாக மாறிக்கொண்டிருக்கின்றது.
என்னை நீக்கினால் நீக்குங்கள்:அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமைப்பொறுப்பிற்கு வரட்டும். ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்சியாக தற்போதைய அதிமுக இல்லை. அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசினால் நீக்குவீர்கள் என்றால், பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினால் நீக்குங்கள்.
சசிகலாவை ஏன் மோசமாக பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமியை கையை பிடித்து முதலமைச்சர் என அடையாளம் காட்டியவர் அவர். அதிமுக ஆட்சியில் 4ஆண்டுகள் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது. இவர்கள் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளைக் கடந்து வந்த கட்சி. இனி, இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை.