தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவுன்சிலர்கள் முயற்சியால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்த கிணறு.. பொள்ளாச்சி அருகே சுவாரஸ்யம்! - சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி

30 years old well in Pollachi: பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் 7 மற்றும் 8வது வார்டு கவுன்சிலர்கள் முயற்சியால் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறு ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

30 years old well in Pollachi
வார்டு உறுப்பினர்கள் முயற்சியால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த கிணறு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 4:46 PM IST

30 ஆண்டுகளுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த கிணறு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் உள்ள 7வது வார்டு விஜய கணபதி நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டிலிருந்து கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறு உள்ளது. சுமார் 40 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தும், மக்கள் உபயோகத்தில் இல்லாமல் இருந்ததால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கிணற்றில் வீசி செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கிணற்று நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதை அடுத்து 7வது வார்டு உறுப்பினர் காஜா உசேன் மற்றும் 8வது வார்டு உறுப்பினர் ஜெய்ன் ஆகியோர் இனைந்து கிணற்றைத் தூர்வாரி சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை அடுத்து சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுநிதி மூலம் சில வாரங்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டு கிணற்றிலிருந்து காலி மதுப்பாட்டில், குப்பைகள் அகற்றப்பட்டன. கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட கிணறு மீண்டும் மக்கள் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 7வது வார்டு பகுதியில் முதற்கட்டமாக 50 பொதுக்குழாய் அமைக்கப்பட்டு தினமும் 2 மணி நேரம் பொதுமக்களுக்கு இந்த கிணற்றுத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்களான வசந்தி மற்றும் மைதீன் கூறும்போது, "விஜய கணபதி நகரிலிருந்த திறந்தவெளி கிணறு ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தும் குப்பை கொட்டும் இடமாக மாறியிருந்ததால் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் இந்த கிணற்று நீரைப் பயன்படுத்த முடியவில்லை.

பேரூராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும், பிற தேவைகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தது. வற்றாத இந்த கிணற்றைச் சுத்தப்படுத்தினால் பேரூராட்சியின் 7 மற்றும் 8வது வார்டுகளின் குடிநீர் இல்லாத பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

ஆகவே இது குறித்து இந்த இரண்டு வார்டு உறுப்பினர்கள் மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தோம். தற்போது கிணறு தூர்வாரப்பட்டு தெருவில் உள்ள பொது குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

ABOUT THE AUTHOR

...view details