கோவை மாவட்டம், பெரியதாடகம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களை சின்னத்தம்பி யானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், விளைப்பயிர்களை நாசம் செய்யும் சின்னத்தம்பி யானையை பிடிக்கவும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் சின்னத்தம்பியை பிடித்து டாப்ஸிலிப் அடுத்த வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால் ஒருவார காலத்தில் தனது சொந்தங்களைத் தேடி இந்த யானை மீண்டும் பெரியதாடகம் பகுதிக்கு வந்தது. மீண்டும் அங்கலகுறிச்சி பகுதியில் தனது இரண்டாவது பயணத்தை தொடங்கிய சின்னத்தம்பி, உடுமலைப்பேட்டையில் இருந்து கண்ணாடிப்புதூர் வரை 100 கிலோமீட்டர் வரை பயணித்தது. ஆனால் இந்த பயணத்தின் போது, விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை. இதனால் அந்தப் பகுதியின் செல்லப்பிள்ளையாக மாறியது.
நிறைவடைந்தது கூண்டுவாசம்: 132 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்த சின்னத்தம்பி யானை! - Chinnatambi
கோவை: மக்களின் செல்லப்பிள்ளையான சின்னத்தம்பிக்கு 132 நாட்களுக்குப் பிறகு மரக்கூண்டில் இருந்து சுதந்திரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், விளைநிலங்களை சேதப்படுத்துவதாக மீண்டும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அதைப் பிடித்து கும்கியாக மாற்ற வனத்துறை முடிவுசெய்தது. இதற்கு எதிர்ப்பும், போராட்டங்களும் நடந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சின்னத்தம்பியை பிடித்து வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர்.
இதனையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு மீண்டும் சின்னத்தம்பி பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. இதற்கடுத்து கூண்டில் அடைக்கப்பட்ட சின்னத்தம்பி யானைக்கு உணவு உட்கொள்வது, பாகன்கள் சொல்லும் வேலையை செய்வது, அவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த சின்னத்தம்பி, 132 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை மரக்கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. சின்னத்தம்பிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூண்டிலிருந்து ஒவ்வொரு கட்டைகளாக அகற்றப்பட்டு வெளியில் விடப்பட்டது.