கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, மொபட் உள்ளிட்ட வாகனங்களில், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. காவல் துறையினர் மற்றும் அலுவலர்களிடம் பிடிபடாத வகையில், நுாதன முறையில் மூட்டை, மூட்டையாக அரிசி கடத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய தாலுகாக்களின் குடிமைப்பொருள் தனித் தாசில்தார்கள், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த மாதம் ஒவ்வொரு தாலுகாவிலும் எவ்வளவு ரேஷன் அரிசி பிடிக்கப்பட்டது. அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வால்பாறையில் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளதால், ரேஷன் கடைகளில் அரிசி இருப்பு வைத்து பொதுமக்களுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய துணை ஆட்சியர் வைத்திநாதன், "ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க, அலுவலர்கள் குழு தொடர் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும்.
பொள்ளாச்சி பகுதியில், நான்காயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதே போன்று மற்ற பகுதிகளிலும் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோந்து பணி மூலம், ரேஷன் அரிசி கடத்துபவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தி, எந்த வழித்தடத்திலும் கடத்தலை தடுக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.