சென்னை:அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து அது தொடர்பான பிரச்சனைகள் சமீபகாலமாக தீவிரமடைந்து வருகின்றனர். ஒற்றைத் தலைமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். என இரு பிரிவாக பிரிந்தனர்.
இதில் ஓ.பி.எஸ். அணியில் கோவை மாவட்ட செயலாளர் பொறுப்பை கவனித்து வந்தவர் கோவை செல்வராஜ். ஈ.பி.எஸ்.சின் கொங்கு மண்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட கோவை செல்வராஜ், தற்போது அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை செல்வராஜ், "அதிமுகவில் தொடர்ந்து செயல்பட வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன். அதே சமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், நல்ல முடிவை விரைவில் எடுப்பேன், ஒரு நாளும் அரசியலை விட்டு விலக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை கே.செல்வராஜ் விடுவிக்கப்படுகிறார். இதுவரை 3 பிரிவாக செயல்பட்டு வந்த கோவை மாவட்டம் நிர்வாக வசதிக்காக கோவை மாநகர், கோவை மாநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட செயலாளராக டி.மோகன், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக எல்.இளங்கோ, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எம்.மணிமாறன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக பி.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ராணுவ உடையில் கஞ்சா கடத்தல்.. கேரளா குருவி சிக்கியது எப்படி?