கோயம்புத்தூர்: மேற்கு மண்டல டிஐஜி விஜயகுமார் நேற்று காலை 7 மணி அளவில் அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பதவியேற்று முதன்முறையாக முதன் முறையாக கோவை வந்துள்ள அருண் நேற்று டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து இன்று கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன், மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டத்திலுள்ள சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள், காவல் துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், டிஐஜி தற்கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக்கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர், கோவை, திருப்பூர் மாநகர ஆணையர்கள், துணை ஆணையர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்ட
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு ஏடிஜிபி அருண், தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.