தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2021, 11:37 AM IST

Updated : Aug 31, 2021, 12:21 PM IST

ETV Bharat / state

கரோனா: கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பல்வேறு கட்டுப்பாடுகளை கோவை மாவட்டத்திற்கு விதித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் வருகின்ற ஒன்றாம் தேதிமுதல் விதிக்கப்படவுள்ளது. அதன்படி,

  • கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பணக்கார வீதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஹோப் காலேஜ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பால், மருந்தகம், காய்கறி கடைகளைத் தவிர்த்து இதர கடைகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை.
  • மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து நகைக் கடைகள், துணிக் கடைகளுக்கு சனி, ஞாயிறுகளில் தடை.
  • அனைத்துப் பூங்காக்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்குத் தடை.
  • அனைத்து வணிக வளாகங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை.
  • அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் இரவு 10 மணிக்கு மூடுவதற்கு ஏதுவாக இரவு 8 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும்.
  • அனைத்துப் பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
  • அனைத்து உணவகங்கள், அடுமனைகள் (பேக்கரி) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.
  • மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை அனுமதி.
  • சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, 50 விழுக்காடு கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி. இதனைச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்.
  • உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 விழுக்காடு கடைகள் உடன் இயங்க அனுமதி.
  • வாரச்சந்தைகள் இயங்கத் தடை.
  • பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தற்காலிகமாக இயங்குவதற்குத் தடை.
  • கேரள, தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்திலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில் சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 'கரோனா இல்லை' சான்றிதழ், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுவர்.
  • ஒன்றாம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 9 முதல் 12ஆம் வகுப்புகள், கல்லூரிகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலிருந்து வரும் மாணவ மாணவிகள் தினசரி வந்துசெல்ல அனுமதி இல்லை.
  • பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து விடுதிகள், பணிபுரிபவர்களுக்காகச் செயல்படும் விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள், பணியாற்றுபவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள், இதர நிகழ்ச்சி குறித்த விவரங்கள் ஒரு வாரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Aug 31, 2021, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details