கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையின் 56-வது கிளை இன்று(அக்.16) துவங்கப்பட்டது. இந்த கடை திறப்பு நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். தொடர்ந்து, நடிகை ஸ்ருதி ஹாசன் கடையை துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவை வருவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். பட்டு சேலைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வழக்கமாக பாரம்பரியமாக துணி உடுத்த மாட்டேன். அப்படி பாரம்பரியமாக உடை உடுத்தினால், அதில் பட்டு தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வழக்கமாக கருப்பு நிற உடை, வெஸ்டர்ன் (western) உடை தான் அணிவேன். ஆனால் புடவை அணியும் போது எனக்கு ஒரு விதமான நேர்மறையான உணர்வுகள் (positive feeling) வெளிப்படும்.
எனக்கு பெரும்பாலும் எனது தந்தை தான் புடவைகளை பரிசளிப்பார். ஆனால் அவர் பெரும்பாலும் மஞ்சள் வெள்ளை நிறத்தில் புடவை எடுப்பார். நான் அவரிடம் கருப்பு அல்லது கருநீலம் நிறத்தில் புடவைகள் எடுத்து தரும்படி கேட்பேன். படங்களை பொறுத்தவரை நானும் ஒரு தமிழ் பெண் தான். தமிழ் படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். கூடிய விரைவில் எனது ஆல்பம் பாடலை எதிர்பார்க்கலாம். பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்று இல்லாமல் அழகான கதையை மக்களுக்கு கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.