கோயம்புத்தூர்:வ.உ.சி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்தியராஜ் இன்று ( ஏப். 07 ) மாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் சத்தியராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மற்றும் மதுரையில் கண்காட்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோவையில் உடனே வரும்படியான சூழல் அமைந்தது. புகைப்பட கண்காட்சி மிக சிறப்பாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தது முதல் அவரது வாழ்க்கை வரலாற்றை அருமையாக பதிவு செய்திருக்கின்றனர். திமுகவிற்காக அவர் உழைத்த உழைப்பு, கஷ்டங்கள் போன்றவற்றை பதிவு செய்திருக்கின்றனர். மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என சிலர் சொல்வதுண்டு, ஆனால் மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது, அதன் முதல் தகவல் அறிக்கை போன்றவை இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட தண்டனைகள் குறித்த சான்றுகளுடன் புகைப்பட கண்காட்சியில் இருக்கின்றன.
ஸ்டாலின், கலைஞரைப் போல வேடம் அணிந்து பரப்புரை செய்வது, அதற்கு எம்.ஜி.ஆர் ஸ்டாலினை பாராட்டுவது போன்ற புகைபடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது சித்தாந்த தெளிவு ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் திருப்தியாக இருக்கிறது. நடுத்தர மக்கள், ஏழை மக்கள் திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய சான்று. எந்த ஆட்சி வந்தாலும் எங்களைப் போன்றவர்கள் நன்றாக இருப்போம், இந்த ஆட்சியில் மக்கள் திருப்தியாக இருக்கின்றனர்” எனக் கூறினார்.