கோயம்புத்தூர்மாவட்டம், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த், “தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வுமேற்கொண்டோம். மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஐந்து மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
கோயம்புத்தூரில் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் செயலி (app) மூலம் கண்காணிக்கிறது. இதுவரை 14 இடங்களில் ஆய்வு நடந்து முடிந்தன. அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கோயம்புத்தூரைப் பொறுத்தவரை கூர்நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் மாணவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
கோவையில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது. இந்த தகவல் வெளிவரக் காரணம் ரெக்கார்டு அதிகளவில் ஆகிறது என்பது தான். இதுவரை 250 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.