கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம் வயது 65. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி கூட்டுறவுத் துறையில் தணிக்கை துறை ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி வயது 57 இவர் சிறுமுகை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ரகோத்தமி வயது 32 என்ற மகளும் ராகுல் ராம் வயது 27 என்ற மகனும் உள்ளார்கள். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், மகன் ராகுல் ராம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்புக்காகத் தைவான் நாட்டிற்குச் சென்றார். அங்குக் கடந்த ஐந்தாண்டுகளாக எம்.எஸ்., பி.எச்.டி படிப்பு முடித்துவிட்டு தைவானில் உள்ள எடிசன் லைடெக் ஆப்டோ கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தீபாவளி அன்று ராகுல்ராம் போனில் தனது தாய், தந்தை, சகோதரி, மைத்துனர் மற்றும் உறவினர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் இந்த வேலை பிடிக்கவில்லை வேறு வேலைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார். அவரது பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கே திரும்பி வரும்படி கூறியுள்ளனர். அப்போது அவர் சிறிது நாட்கள் கழித்து அங்கு வருவதாகக் கூறியுள்ளார்.