கோயம்புத்தூர்:எம்மதமும் சம்மதம் என்ற நோக்கில்தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் மும்மத குருமார்கள் பெயருடன் உள்ள தனது மகளின் கல்யாண பத்திரிக்கையினை அடித்துள்ளார். தற்போது இதுதான், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்னைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் எஸ்.ஐ.சி அமைப்பில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தபோது மதம் சார்ந்த பிரச்னைகளை சிறப்பாக கையாண்டும், துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும், கட்டுப்படுத்தியும் உள்ளார்.
இத்தகைய துணிச்சலான செயலுக்கு ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதும் பெற்றுள்ளார். இதனிடையே எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் வெற்றிச்செல்வன் தனது மகளின் திருமணத்தை நடத்த முடிவெடுத்திருக்கிறார். இந்த நிலையில், பி.எஸ்.டி படித்து வரும் இவரது மகள் நிஷாந்தினிக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணத்தை மதத்தைக் கடந்து நடத்த முடிவெடுத்த வெற்றிச்செல்வன், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்விவினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.