கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் வனப்பகுதி என்பது யானை வலசை பாதையில் முக்கிய இடமாகும். மேலும், இங்குள்ள கல்லாறு வழித்தடம் ஆண்டுதோறும் யானைகள் பயணிக்கும் பகுதியாகும். கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை வழியாக கல்லாறு அடைந்து அங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக சென்று, அங்கிருந்து நீலகிரி மற்றும் கர்நாடகா, கேரளா வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கல்லாறு யானைகள் வழித்தடத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் யானைகள் வழி மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் சுற்றி வரும் ஆண் யானை ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் பாகுபலி என்று பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.
இந்த பாகுபலி யானை நாள்தோறும் மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து நாசம் செய்து வருகிறது. தற்போது இந்த யானை மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையை கடந்து விவசாய தோட்டங்களில் புகுந்து வருகிறது. இந்த யானை செல்லக்கூடிய வழிகளில் ஆங்காங்கே தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் யானை அந்தப் பகுதி வழியாக செல்ல முடியாமல் மாற்று பாதையை பயன்படுத்தி வருகிறது.