கோயம்புத்தூர்:திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நேற்று (ஆகஸ்ட். 15) தனது தொகுதிக்குட்பட்ட அன்னூர், கணேசபுரம், கருவலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். காலையில் அன்னூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மாலையில் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆ.ராசா பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது மணிப்பூர் விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசால் மாநிலங்கள் பழி வாங்கப்படுவது குறித்தும், மக்களை வாட்டி வதைக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு சென்னை செல்வதற்காக அவிநாசியில் இருந்து சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடியை ஆ.ராசாவின் கார் கடந்து செல்லும் போது சாலையில் வேகமாக சென்ற இளைஞர் ஒருவர் லாரியில் மோதி மயங்கி விழுந்து கிடந்து உள்ளார். இதனைக் கண்ட ஆ.ராசா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காரை நிறுத்தி அந்த இளைஞருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.