பாஜக - இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல்.. தாராபுரத்தில் நடந்தது என்ன? திருப்பூர்: இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் இவரது உதவியாளர் சங்கர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி திடீரென இரும்பு கம்பியால் ஈஸ்வரன் மற்றும் சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
உடனே ஈஸ்வரன் மற்றும் சங்கர் ஆகியோரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈஸ்வரன், சங்கர் ஆகியோர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மங்களம் ரவியின் தலையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் பொருளாளர் கொங்கு ரமேஷ் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
ஆனாலும், அவர்களுக்குள்ளான தாக்குதல் நீடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆகையால் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த மூவரையில் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகி ஆகியோர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கிக் கொள்ளும் காட்சிகளும், அதனைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் அலறி ஓடுவதும் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்சியில் சேரும் பெண்களை போட்டோ எடுத்து மிரட்டிய பாஜக நபர் கைது!