சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்து கோயம்புத்தூர்:உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவர் இயற்கை எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 24)சென்னையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சின் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றி வருவதற்காக கோவை வழியாக கேரளாவிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வேறு வாகனத்தை முந்திக் கொண்டு கார் ஒன்று டேங்கர் லாரியை நோக்கி வந்துள்ளது.
அப்போது கார் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரியை ஓட்டுநர் ராஜேஷ்குமார் வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. இதனைத்தொடர்ந்து டேங்கர் லாரியின் பின்னால் வந்த மற்றொரு லாரி, இந்த டேங்கர் லாரியின் மீது மோதி நின்றது. இதில், டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு லாரி பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது. மேலும், டேங்கர் லாரியில் முழுமையாக எரிவாயு லோடு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் லாரி ஒட்டுநர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தொடரும் லாரி ஒட்டுநர்களின் அவல நிலை: சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகன ஒட்டுநரிடம் லஞ்சம் கேட்டு தாக்கிய சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த லாரி ஒட்டுநரின் செல்போன் மற்றும் சாவியைப் பறித்து கொண்டு பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மிரட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஓட்டுநர் ஜெகா வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில் கூறியதாவது; தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பழனிக்கு தினமும் நான் மாட்டுத் தீவனம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பண்ணாரி சோதனைச் சாவடியில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஓட்டுநரை வனத்துறையினர் லஞ்சம் கேட்டு தாக்கியபோது நடந்த சம்பவத்தை நான் செல்போனில் வீடியோ எடுத்தேன். இதையறிந்த வனத்துறையினர் நான் பண்ணாரி வனச் சோதனை சாவடியில் வாகனத்தில் கடந்து செல்லும்போது வாகனத்தை தடுத்து நிறுத்தி வனச் சோதனை சாவடியில் நடைபெற்ற பிரச்னையை வீடியோ எடுத்து வெளியிட்டது நீ தானே எனக் கூறியபடி எனது செல்போனை பறித்ததோடு வாகனத்தின் சாவியையும் பறித்து வைத்து கொண்டனர்.
இந்த சாலையில் நீ எப்படி வாகனம் ஓட்டுகிறாய் எனப் பார்த்துக் கொள்கிறோம் என மிரட்டியதோடு எனது செல்போனை காவல்துறை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர் சரவணன் என்பவரிடம் கொடுத்து எனது செல்போனில் இருந்த புகைப்படம், வீடியோ மற்றும் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ரீ செட் என்ற முறையில் அழித்துவிட்டு செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியை கொடுக்காமல் இழுத்தடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பயணிகளை ஏற்றாமல் சென்ற ஏர் அரேபியா விமானம்; விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்!