தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மீண்டும் 'பவாரியா கொள்ளையர்கள்' ஆதிக்கமா? - சிறப்பு தொகுப்பு - sathyamangalam tiger reserve

உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட தீரன் திரைப்படத்தில் விவரிக்கப்படும் பவாரியா கொள்ளை கும்பலின் தாக்கம் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் தலைத் தூக்கி உள்ளதை உணர்த்தும் வகையில், சத்தியமங்கலத்தில் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த சிறப்பு அலசல்..

தமிழ்நாட்டில் மீண்டும் ‘பவாரியா கொள்ளையர்கள்’ ஆதிக்கமா? - சிறப்பு தொகுப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் ‘பவாரியா கொள்ளையர்கள்’ ஆதிக்கமா? - சிறப்பு தொகுப்பு

By

Published : Feb 27, 2023, 9:28 AM IST

பவாரியா கொள்ளை கும்பலின் தாக்கம் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் தலை தூக்கி உள்ளதா? வனத்துறையினர் அளித்த சிறப்பு பேட்டி

கோயம்புத்தூர்: 'பவாரியா கொள்ளையர்கள்' என்ற பெயரைக் கேட்டாலே 1996ஆம் ஆண்டு கால கட்டங்களில் அச்சப்படாதவர்களே இல்லை. அவ்வளவு கொடூரமாக கொலை, கொள்ளையில் ஈடுபடும் இவர்கள்தான் பவாரியாவினர். 1995 - 2006ஆம் காலக் கட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீடுகளை கண்காணித்து, அங்கு கொள்ளை அடித்து வந்தனர்.

மேலும் இதற்காகவே அவர்கள் ஆயுதங்களை தயாரித்து, வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கு லாரி மூலம் சரக்குகளைக் கொண்டு வரும் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். இவ்வாறு வருபவர்கள், சரக்குகளை உரிய இடங்களில் இறக்கிய பிறகு, அருகில் உள்ள வீடுகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

1995ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை சுமார் 200 வழக்குகள் இவர்கள் மீது தமிழ்நாடு காவல் துறையினர் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்தனர். அப்போதைய பேசும் பொருளாக இருந்த இந்த பவாரியா கொள்ளையர்கள் பற்றி, தற்போது மீண்டும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

புலியை பதுக்கிய பவாரியா:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த வட மாநிலத்தினரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கண்டபோது, அவர்கள் சாக்குச் பையில் வைத்திருந்த புலித்தோல், புலி நகம் மற்றும் பற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59) மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் சந்தர் (50) என்பதும், இவர்கள் பவாரியா கும்பலைச் சார்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதனையடுத்து அவர்கள் நான்கு பேரையும் நீலகிரி மாவட்டம் அவிலாஞ்சிக்கு அழைத்து வந்த வனத்துறையினர், புலி வேட்டையாடியது எப்படி, எங்கெல்லாம் தங்கி இருந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

அப்போது, அவர்கள் புலியை பொறிவைத்து பிடித்து கொடூரமாக கொன்று தோலை உரித்தது தெரியவந்தது. மேலும் புலியுடன் சிறுத்தையையும் வேட்டையாடிய அவர்கள், சிறுத்தையின் தோல் சிதைந்ததால் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

புலி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு சீன சந்தையில் நல்ல விலை உள்ளதால், இவற்றை வேட்டையாடுவதில் இந்த கும்பல் ஈடுபடுவது வாடிக்கை என கூறப்படுகிறது. இத்தகைய கொடூர கும்பல் மீண்டும் தமிழ்நாட்டின் வனப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க, அனைத்து புலிகள் காப்பகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பவாரியா கும்பல் ஊடுருவியது எப்படி? இதுகுறித்து வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் வெங்கடேஷ் ஈடிவி பாரத் தமிழ்நாடு சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய வெங்கடேஷ், "கடந்த 2020ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் புலி வேட்டையில் ஈடுபடும் பவாரியா கொள்ளையர்கள் தங்கி இருந்ததை கண்டுபிடித்தோம். இதனையடுத்து அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கரோனா ஊரடங்குக்குப் பின்னர் அவர்கள் இங்கிருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்று விட்டனர்.

சமதளங்களில் மட்டுமே இது போன்ற வேட்டைகளை நடத்திய பவாரியா கும்பல், முதல் முறையாக மலைப்பகுதியில் புலி வேட்டை நடத்தி உள்ளனர். இவர்கள் ஹரியானா எல்லை பதான்கோட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச எல்லையில் உள்ளனர். இந்த நிலையில்தான் பவாரியா குழுவைச் சேர்ந்தவர்கள் எமரால்டு பகுதியில் தங்கியிருந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தோட்டத்து வேலை, காய்கறி விற்பனை மற்றும் கம்பளி விற்பனையில் ஈடுபட்டு தமிழ் கற்றுக் கொண்டனர். பின்னர் அங்கேயே தங்கி இருந்து புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்துள்ளனர். மேலும் யானைகள் அந்தப் பகுதியில் இல்லாததால் அதனை சாதகமாகப் பயன்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மலைப்பகுதியிலும் கண்காணிப்பு அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு வேட்டை தடுப்பு முகாம் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. 15 நாட்கள் அங்கு தங்கி, அந்த பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அந்த பகுதியில் தற்போது புலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கோரகுந்தா, தெற்கு வனச்சரகம் பார்சன் வேலி, பைகாரா ஆகிய வனச்சரகங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும். ஏற்கனவே முக்குறுத்தி தேசிய பூங்காவில் அதிக பாதுகாப்பு உள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகரித்தால் இதுபோன்ற நடவடிக்கையை தவிர்க்க முடியும்.

புலி வேட்டையை நான்கு பேர் மட்டுமே வனத்தில் தங்கி பணியை கண்காணித்து வேட்டையாடியுள்ளனர். புலி இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கு போய் தங்கி வேட்டையாடி உள்ளனர். இனிமேல் இந்த பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் தங்கும் அளவு கூடாரம் அமைத்து தங்கி இருப்பார்கள்.

அவர்களுக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கிகள், வாக்கிடாக்கி மற்றும் செல்போன் ஆகியவை வழங்கப்படும். அவர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து சென்ற பின்னர், ஒவ்வொரு பகுதியை குறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும். வழக்கமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்காணிப்பு கேமரா வைக்கப்படும்" என்றார்.

மேலும், "இனிமேல் இந்த பகுதிகளில் வருடத்திற்கு ஒருமுறை கண்காணிப்பு கேமரா வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினர் நடமாட்டம் அதிகமாக இருந்தால், வெளி ஆட்கள் யாரும் வர மாட்டார்கள். ஒரு வனச்சரத்துக்கு நான்கு பேர் இந்த முகாமில் தங்கி இருப்பார்கள். புலி வேட்டையைத் தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளும் வட மாநிலத்தவர் குறித்தும் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தீரன் பட பாணி.. நீலகிரியில் பவாரியா கும்பல்.. வனப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு..

ABOUT THE AUTHOR

...view details