ஆஸ்கார் பட்டியலில் தமிழ்நாட்டின் யானை பாகன் தம்பதிகளின் கதை;அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? கோவை:உலகில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் அத்தனை திரைப்படங்களுக்கும் ஆஸ்கார் விருது என்பது மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது. இந்த விருது பெற பிரமாண்டத்தை விட யதார்த்தமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் யானை குட்டிகளைப் பற்றி ஓடிடி-யில் வெளியான திரைப்படம் ஒன்று ஆஸ்கார் பட்டியலில் சிறந்த ஆவணப்படமாக இடம் பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளது. முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 யானைகள் உள்ளன. இதில் ரகு,பொம்மி என்ற இரு கடைக்குட்டிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு ஓசூர் பகுதியில் குட்டியாக மீட்கப்பட்ட ரகு மற்றும் 2019ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட பொம்மி என்ற தாயை பிரிந்த இந்த இரண்டு குட்டி யானைகளும் மீட்கப்பட்டு முதுமலையில் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தாயைப்பிரிந்த இந்த இரு யானைக் குட்டிகளை பற்றியும் அவைகள் எவ்வாறு பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன என ஓடிடி தளத்தில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (Elephant whisperers) திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகளை வளர்த்து வரும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினரின் அன்றாட வாழ்க்கையும், தாயைப் பிரிந்த இரு குட்டி யானைகளும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது; அதனுடைய குணாதிசயங்கள், அவர்களோடு ஒன்றிணைந்து வாழும் முறைகள் படமாக்கப்பட்டன.
யானைக்கு உணவூட்டும் பெள்ளி அதேபோல், யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளைப் போல யானைக் குட்டிகளை வளர்த்து தற்போது வரை இந்தக் குட்டி யானைகள் எப்படி தங்களோடு
இருந்து வருகின்றன எனவும், அதிகாலை முதல் மாலை வரை யானைகளை குளிப்பாட்டும் முறை, உணவளிப்பது, வனப்பகுதியில் அழைத்துச் செல்வது என யானைக் குட்டிகள் இவர்களின் சொல் பேச்சுக்கு எப்படி கட்டுப்படுகிறது என்பதையும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தில் வெளியானது.
இந்த திரைப்படம் தற்பொழுது, சினிமாக்களுக்கு மணி மகுடமாக உள்ள ஆஸ்கார் பட்டியலில் சிறந்த ஆவணப்படமாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, யானைகளை பராமரிக்கும் பெள்ளி கூறுகையில், 'இந்த சினிமா படப்பிடிப்பு நடக்கும் பொழுது தாயை பிரிந்த யானைகளுடன் தான் இருப்பதும், அவைகளுக்காக தான் செய்யும் பராமரிப்புகள் என்னென்ன என்பது பற்றி மட்டும் தன்னிடம் கேட்டறிந்தனர். யானை குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்று வருவது, ஆற்றில் யானைகளை குளிப்பாட்டுவது, யானைகள் தங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது என அன்றாடம் நாங்கள் யானைகளுடன் பயணிக்கும் நாட்களை படம் பிடித்து தற்பொழுது விருது பட்டியலில் இத்திரைப்படம் இடம்பெற்று இருப்பது பெருமையாக உள்ளது.
விருது கிடைத்தால் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் கிராமத்தினருக்கும், அரசுக்கும் மிகப்பெரிய பெருமைதான்’ எனத் தெரிவித்தார். யானைக் குட்டிகளுக்கு இன்றளவும் உடல்நிலை சரி இல்லை என்றால், அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளை கொடுத்து, தங்கள் குழந்தைகளைப் போல் பார்த்துக் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் இருவரும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Oscars 2023: ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு!