கோவை:வெறும் நான்கு ரூபாய் பாக்கி கொடுக்க மறுத்த காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர், பெட்டிக் கடைக்காரரின் காதை கடித்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரியத்தைச் செய்தது கோவைப் புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 4ஆவது பெட்டாலியினில் காவலராகப் பணிபுரியும் முகமது ஆசிக்(24) என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வரும் செந்தில்குமார் என்பவர் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக மகன் செல்வசிவா (22) அவ்வப்போது கடையை கவனித்து வந்துள்ளார். மேலும், பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை இருந்ததால் கதவு இல்லாமல், தார்பாய் கொண்டு மூடி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று(ஆக.18) நள்ளிரவு வழக்கம்போல தார்பாய் கொண்டு கடை மூடப்பட்டு உள்ளே செல்வசிவா இருந்துள்ளார். அப்போது அங்கு நள்ளிரவு 2 மணிக்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் தன்னை காவல் துறையைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, சிகரெட் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.