கோயம்புத்தூர்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற நபர் கோவை செட்டிபாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு கணவன் மனைவி பிரச்சினையில் தனது தாய் வீட்டிற்கு சென்ற மனைவி காளீஸ்வரியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி செட்டிபாளையம் பகுதியிலுள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வத்தை பல மணி நேரம் போராடி மீட்ட காவல்துறையினர் இருவரையும் சேர்த்து வைத்தனர். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காளீஸ்வரி மீண்டும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று (ஆகஸ்ட் 6) மாலை தனது குழந்தைகளை பார்ப்பது போல் காளீஸ்வரியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது மூன்று வயது மகனை தூக்கி கொண்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள சுமார் 250 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் நின்று மிரட்டல் விடுத்த செல்வத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்க மறுத்த செல்வமோ, தனது சொந்த ஊரான சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் என இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து தனது குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அப்போதுதான் தான் கீழே இறங்குவேன் எனவும் கூறி கோபுரத்தின் மீது குழந்தையுடன் அமர்ந்து கொண்டார்.
நேற்று (ஆகஸ்ட் 6ஆம் தேதி) மாலை 5 மணிக்கு செல்போன் கோபுரத்தில் ஏறிய அந்த நபர் காவல்துறையினர், பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் என பலரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாது கோபுரத்திலிருந்து இறங்காமல் அங்கேயே இருந்தார்.
தொடர்ந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அங்கு வந்த அவரது மனைவி காளீஸ்வரி, இனிமேல் சேர்ந்து வாழ்வேன் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் குழந்தையுடன் கீழே இறங்கினார் போதை ஆசாமி செல்வம். இதை அடுத்து குழந்தையுடன் அந்த நபரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி, செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கையில் குழந்தையுடன் சுமார் 8 மணி நேரம் செல்போன் கோபுரத்தில் நின்ற நபரால் செட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:‘கேரளாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட உடல் உறுப்புகள்’ - மூன்று பேர் கைது.. நடந்தது என்ன?