கோயம்புத்தூர்: சிறுமுகை வனப்பகுதிக்குள் ராமர் என்பவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு இறந்து விட்டார் என மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சிறுமுகை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் மூலம் தகவலறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் தகவலளித்த கருப்பசாமி என்பவரை அழைத்துக்கொண்டு கூத்தாமண்டி தூம்புப்பள்ளம் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கன் ஓடை பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கருப்பசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கருப்பசாமியும், மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், உயிரிழந்த ராமர் உள்ளிட்ட மூவரும் கோத்தகிரிக்குட்பட்ட கரிக்கையூர் அருகிலுள்ள பங்களா குழி பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டச்சென்ற தெரியவந்தது.