கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு TN38 N 2910 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து ஆனைக்கட்டி வரை சென்று அங்கு சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி விட்டு மன்னார்காட்டிற்கு செல்லும்.
இப்பேருந்தை இன்று மதியம் வெள்ளியங்கிரி என்பவர் ஆனைகட்டிக்கு ஓட்டி வந்தபோது, பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஆனைக்கட்டியில் இருந்த டீக்கடையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இப்பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பணி முடிந்து, இறங்கிவிட அதையடுத்து இப்பேருந்தை குப்புராஜ் என்ற ஓட்டுநர் ஓட்டிவந்துள்ளார்.
குப்புராஜ்-க்கு வண்டியில் பிரேக் பிடிக்காததை, வெள்ளிங்கிரி தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அதே பேருந்து மீண்டும் கோவையில் இருந்து ஆனைகட்டிக்கு வந்தபோது மீண்டும் பிரேக் பிடிக்காமல், அங்கு ஐயப்பன் கோயில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு அருகே இருந்த உணவகத்திற்குள் புகுந்த நின்றுள்ளது.