கோவை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் மழை பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த சூழலில் பாக்டீரியா பரவல் காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்குக் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் காரணமாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை தற்போது வரை அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வரவில்லை.
இனி வரும் நாட்களில் தற்போது வரும் நோயாளிகளை விட ஒன்றோ, இரண்டோ சதவீதம் அதிகமாக வரலாம் எனவும், இந்த பருவமழை காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு எனவும் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி கூடுதலாக நோயாளிகள் வந்தால், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை வழங்க வேண்டும் என்ற திட்டமிடலும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு மருத்துவர் நிர்மலா வழங்கிய அறிவுறுத்தல்:பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் குறித்தும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும், தற்போது வரும் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் என்பதால் குழந்தைகளைப் பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.