கோயம்புத்தூர் :மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணி சார்பாக போரட்டம் நடைபெற்றுவருகிறது.அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட திமுக கவுன்சிலர்கள், திமுக மகளிர் அணியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து கூட்டதில் கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில், “ஆட்சி செய்ய தகுதியில்லாத மோடி அரசு பதவி விலக வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வென்றது என்று கேள்வி படவே கூடாது” என்றார். தொடர்ந்து, வானதி சீனிவாசன் குறித்து பேசிய அவர், “எங்கள் வீட்டு ஆண்களை நாங்கள் தான் அனுப்பி வைக்கிரோம், ஒவ்வொரு வீட்டிலயும் இருக்குற பிரச்னைய நீங்க போய் பார்த்து சீர்படுத்தி கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்குறதே நாங்தான்” என கூறினார்.
முன்னதாக கடந்த மாதம் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், “திமுக கவுன்சிலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தால், அவர் ஒரு வீட்டில் இருக்க மாட்டார், திமுகவினர் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், திமுகவின் ஜீன் அது” என பேசியிருந்தார்.