கோயம்புத்தூர்:நீலகிரி மலைத்தொடரின் அருகில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனச்சரகத்தை ஒட்டி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான விலங்குகள் நடமாடி வருகிறது.
குறிப்பாக யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்த யானைகள், காட்டெருமை, மான்கள், உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புகுந்து வருவது வழக்கம்.
அந்த வகையில், மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவு நீரில் மான் ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீர், தனியாக பைப் மூலம் குறிப்பிட்ட இடத்தில் விடப்படுகிறது.
இதில், இரவு நேரங்களில் வன விலங்குகள் தண்ணீரைக் குடிப்பதால், அவை நோய்வாய்பட்டு இறந்து விடுவதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் கழிவுகளும் திறந்து விடப்படுவதால், அதனை குடிக்கும் வன விலங்குகளுக்கு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், தண்ணீர் தேடி வந்த மான், தற்போது அதனை குடித்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பொங்கல் ரேஸில் இருந்து விலகிய 'லால் சலாம்' - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!