கோவை:தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 35). இவரது மனைவி வெண்ணிலா (வயது 30). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அய்யாசாமி - வெண்ணிலா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அய்யாசாமி பழைய கார்கள் வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி வெண்ணிலா வீட்டை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் இல்லாத காரணத்திற்காக இவர்கள் இருவரையும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் தாலியூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி இருவரும் குடியேறி உள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடுக் கதவு திறக்காமலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் வீட்டைத் திறந்து பார்க்கும் போது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்து உள்ளனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததாலும், காதல் திருமணம் செய்து 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால் உறவினர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தாலும் இருவரும் நீண்ட நாட்களாக மன வருத்தத்திலிருந்ததாக கூறப்படுகிறது.