கோயம்புத்தூர்: கோவையில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஜமேஷா முபின் எதிர்பாராத விதமாக கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஜமாத்தினர் முன்வரவில்லை என கூறப்பட்டது. இதற்கு கிஷோர் கே சாமி ரீ ட்விட்டில் குண்டு ஒழுங்காக வைக்காத நபரை எப்படி ஜமாத்கள் அடக்கம் செய்வார்கள் என பதிவிட்டிருந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி மீது கோவை சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று (நவ.27) சென்னையில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து கோவை 4-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர்.
மேலும், கிஷோர் கே.சாமியிடம் 6 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்திரவிட்டார். அதனையடுத்து போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடற்பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்திலுள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைவாசம், அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் - பொன்முடி நம்பிக்கை