பொதுவாக மிட்டாய் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும், அதில் குழந்தைகள், பெரியவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் பெரியவர்களைக் கூட குழந்தைகளாக மாற்றும் அதிசயம் இந்த மிட்டாய்களிடம் உள்ளன.
இந்நிலையில் 1980-1990 ஆம் ஆண்டுகளில் தங்களது இளம் பருவத்தில் அவர்கள் சுவைத்து மகிழ்ந்த, பாரம்பரியமான, சத்தான மிட்டாய்கள் விற்பனை செய்வதற்காகவே கோவையில் மிட்டாய் கடை ஒன்று தொடங்கப்பட்டுள்ள தகவல் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
நாட்டுச்சக்கரை - தேன் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேன்மிட்டாய், பருப்பி, கடலைமிட்டாய், சுக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், எலந்தபழம், எலந்தவடை, எலந்த பொடி, கலர் அப்பளம், சங்கு மிட்டாய், மம்மிடாடி, பொறி உருண்டை, எல்லு உருண்டை, புளிப்பு மிட்டாய், பம்பாய் மிட்டாய், ஜவ்வு மிட்டாய், சோன் பப்புடி, கலர் ஜாம், கயிறு மிட்டாய், உரைவெச்ச மாங்காய், குச்சி ஐஸ், கலர் மிட்டாய் இப்படி பல வகையான திண்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மிட்டாய்கள் குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை எளிதில் ஏற்படுத்திவிடுகிறது. இந்த அச்சத்தின் காரணமாக குழந்தைகளுக்கு மிட்டாய்களை வாங்கி கொடுப்பதையே பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர்.
தங்களுக்கு சுவைக்க கிடைத்த சத்தான பாரம்பரிய மிட்டாய்கள் தங்களது பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் கிடைத்திருக்கும் வாய்ப்பாக இந்த மிட்டாய் கடையை 80'ஸ் & 90’ஸ் கிட்ஸ் பார்க்கின்றார்கள்.