கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் பிரசுரங்களை வழங்கி மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிவைத்த கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் பாஜக அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்ட அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “உலக நாடுகளை கரோனா பாதிப்பு அச்சுறுத்திய போது இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கி மக்களை பாதுகாத்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். உணவு தானியம், தடுப்பூசியை தாண்டி, சிறு குறு தொழில்களுக்கு உதவியுள்ளார்” என்றார்.
இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு: தொடர்ந்து, பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தினார். டிஜிட்டல் பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழ்நாடு அதிக பலன் அடைந்துள்ளது. முத்ரா கடன் தமிழ்நாட்டில் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, ஆகியவற்றில் தமிழ்நாடு பயனடைந்துள்ளது. தொழில்துறையில் 3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது. மத்தியில் 11 பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இராணுவத்தில் பெண்கள்: இராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் சொந்தமாக தொழில் புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
பிரதமர் தேவையில்லாத சட்டங்களை நீக்கி அவசியமான சட்டங்களை கொண்டு கொண்டுவந்தவர். நாட்டில் இருந்த பிரதமர்களின் வாழ்க்கைகளை தெரிந்துகொள்ள அலுவலகத்தை அமைத்துள்ளார். நதிகளை இணைக்க பிரதமர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார். அதற்காக தமிழ்நாடும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும். வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதை பிரதமர் நரேந்திர மோடி லட்சியமாக வைத்து உள்ளார்.