கோயம்புத்தூர்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலமாக, முதலாவதாக அப்பகுதியில் இருந்த 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி வந்த இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரில் 21 பேர் சென்னை விமான நிலையத்திற்கும், 7 பேர் கோவை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி டெல்லியிலிருந்து விமல், ரஞ்சித், சந்தியா, வினோத், சந்தோஷ், திவாகர், ராஜலட்சுமி ஆகிய 7 பேர் கோவை விமான நிலையத்திற்கு வந்தனர்.
இந்நிலையில், கோவை வந்த 7 பேரையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர்களை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோர் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் யாராவது இருந்தால், அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளனர்” என்று கூறினார்.