புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் மாயமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை கடத்தியதாக சிவகாசியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ரஞ்சித்குமார் கோவை பீளமேடு சேரன் மாநகர் அருகே உள்ள குமரன் நகரில் வாடகை வீட்டில் வசித்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமி அந்த வீட்டில் இருக்கலாம் என கிடைத்த தகவலின் பேரில் பீளமேடு காவல் துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
காவல்துறையினர் அங்கு சென்றபோது சந்தேகத்துக்கு இடமான வகையில் வீடு பூட்டப்பட்டு இருந்தது, இதனையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டினுள் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்த 368, 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். 7.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தாள்களை வரவழைத்து அசல் ரூபாய் நோட்டுகளை பிரதி எடுத்து போலி ரூபாய் நோட்டுகளை உருவாக்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் புழக்கத்தில் விட திட்டமிட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த முறைகேட்டில் ரஞ்சித்குமார் மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது அவருடன் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா? மேலும் இங்கு உருவாக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் வேறு எங்காவது பதிக்க வைக்கப்பட்டுள்ளதா? சிறுமி தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.