கோயம்புத்தூர்:குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இன்று காலை சுமார் 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் திரௌபதி முர்மு மைசூரு சென்று, அங்கிருந்து தனி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.30 மணிக்கு மசினகுடி வருகிறார். பின்னர், அங்கிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழமையான யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.
அங்கு உள்ள வளர்ப்பு யானைகளையும், யானைகளுக்கு உணவளிப்பதையும், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த ரகு மற்றும் பொம்மி யானைகளையும், அதன் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் சந்திக்கிறார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு காட்டு யானைகளை விரட்டச் சென்று களம் கண்ட பாகன்களிடம் உரையாடுகிறார். தெப்பக்காடு மற்றும் டாப்சிலிப் யானை முகாம்களில் பணியாற்றும் யானை பாகன்களை சந்திக்கும் அவர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து மசினகுடிக்கு வருகிறார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூரு சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.