கோவை: கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் பில்லூர் அணை உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளதால், கோடை காலங்களில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இப்பகுதி வருவது வழக்கம். அதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் மேலூர் காப்புக்காட்டில், மானார் வனப்பகுதியில் காரமடை வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி ஆற்றங்கரையில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்தனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.